முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

பூஜ்யமாம் ஆண்டு

1. 'பூஜ்யமாம் ஆண்டு' நாவல் ஏன்?

'பூஜ்யமாம் ஆண்டு' ஒரு சிறுவர் நாவல். அறிவியல் புனைக்கதையாக எழுதப்பட்டுள்ள இது, இதுவரை வெளிவந்துள்ள உலகலாவிய சிறுவர் நாவல்களில் சிறந்தது மட்டுமல்ல வித்தியாசமானதும்கூட. அறிவியல் திறன்போட்டிகளான 'யுரோகா யுரோகா' மூலம் மூன்று பேர் கொண்ட மாணவர் அணியை தேர்ந்தெடுத்து அவர்களை தனது 'நிலாவுக்கு முதல் இந்தியர்கள்' திட்டத்தில் சந்திரனுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்கிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் அணியணியாக பங்கு கொள்கின்றனர். அதில் ஒரு அணி மிகவும் வித்தியாசமானது. அந்த அணியில் தான் ஒரு பார்வையற்ற சிருவன் (கலீல்), காது கேளாத ஒரு சிறுவன் (எடி), வாய் பேச வராத ஒரு சிறுவன் (ஹாக்), பங்கு கொள்கிறார்கள். போட்டியோ மிகவும் கடினமான சுற்றுகளை உள்ளடக்கியதாயுள்ளது. இடையே போட்டியிலிருந்து அறிவு மிக்க பல மாணவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களை கடத்துவது யார்? எதற்காக? அதை கலீல் போன்ற ஒருவனால் கண்டுபிடிக்க முடியுமா? 1000 அறிவியல் கண்டுபிடிப்புகள், 10,000 அறிவியல் செய்திகள் , நூற்றுக்கணக்கான போட்டிச் சுற்றுகள் சர்வ தேச அறிவியல் அரங்கங்கள் என நாவலை நாம் பிரமிக்கும் விதமாக கட்டமைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் சிறுவர் நாவலாசிரியர் எழுத்தாளர் இரா.நடராசன். பார்வையற்ற மாணவர்களும் வாசிக்கும் வண்ணம் பிரைல் மொழியில் வெளிவந்துள்ள முதல் முயற்சி இது. சரி.. அது என்ன 'பூஜ்யமாம் ஆண்டு'? நாவலுக்குள் தேடுங்களேன்.


2. 'பூஜ்யமாம் ஆண்டு' - எழுதியவர்?

இரா. நடராசன் (பி.1964) எழுத்தாளர், நாவலாசிரியர், கல்வியாளர் மற்றும் அறிவியல் புனைக்கதை ஆசிரியர் (science fiction). சிறுவர் இலக்கியத்தில் மட்டுமல்ல, சிறுகதை நாவல், மொழிபெயர்ப்பு, அறிவியல் என தமிழில் பல்துறைகளில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர்.

இரா.நடராசன், ஆயிஷா நடராசன் என்று அழைக்கப்படும் அளவிற்கு அவரது 'ஆயிஷா' குறுநாவல் மிகப்பிரபலமானது. தனி புத்தகமாக ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது. திருமண வீடுகளில் தாம்பூலப் பையில் ஒரு அங்கமாகக்கூட இடம்பெற்ற 'ஆயிஷா' குரும்படமாய் எடுக்கப்பட்டது. ஆறுமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதைதொடர்ந்து 'ரோஸ்' (பள்ளிக்கல்வியின் - பெற்றோர் நெருக்குதலில் சிக்கி குழந்தைகள் பரிதவிப்பதை சித்தரித்த உடையாடல் குறுநாவல்), நாகா (உலக சாரண இயக்கத்தின் நூற்றாண்டை கொண்டாடிய நாவல் - சுனாமியை மையமாகக் கொண்டது) மலர் அல்ஜீப்ரா (தமிழின் கணிதத்தை குழந்தைகளுக்கு புரிய வைத்த அரிய நாவல், பல்வேறு பரிசுகளை பெற்றது) ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் (செஸ் விளையாட்டை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் அருமையான நாவல்) உட்பட குழந்தைகள் நாவல்களும் கலீலியோ, டார்வின் உட்பட குழந்தை நாடகங்களும் எழுதியுள்ளார். கணிதத்தின் கதை (தமிழக அரசு தமிழ் வளர்சித்துறை முதல் பரிசு பெற்றது) வரலாறு மறந்த விஞ்ஞானிகள் (ஏழு பதிப்புகள் வெளிவந்துள்ளன) உலக தொழில் நுட்பமுன்னோடிகள், பெண்விஞ்ஞானிகள், இருபதாம் நூற்றாண்டில் இயற்பியலின் வளர்ச்சி உட்பட சிறுவர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டிய அறிவியல் நூல்களும் வெளிவந்துள்ளன. பன்மொழி சிறுவர் கதை தொகுதிகள் இரண்டு வெளிவந்துள்ளன.

சிறந்த சிறுகதை எழுதாளரான இரா.நடராசன், மிச்சமிருப்பவன், மதியெனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து (இலக்கிய சிந்தனை பரிசு மற்றும் லில்லி தெய்வசிகாமணி முதல் பரிசு ஆகியவை பெற்றது) ஒரு தூய மொழியின் துயரக்குழந்தைகள் ஆகிய சிறுகதை தொகுதிகளின் ஆசிரியர். பாலித்தீன் பைகள் (திருப்பூர் கலை இலக்கிய பேரவை நாவல் போட்டி - முதல் பரிசு) இவரது மிகப்பிரபலமான நாவல். இவரது மூன்று கதைகள் இதுவரை குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பிலும் கால்பதித்த இவர், பிடெரிக்டக்லஸ் (கருப்பு அடிமையின் சுயசரிதை), நைஜீரிய எழுத்தாளர் யூச்சியமச்செட்டாவின் பையாஃப்ராவை நோக்கி நாவல், கூசி-வா-திவாங்கோவின் (கென்யா) இடையில் ஓடும் நதி நாவல் உட்பட பலமொழிபெயர்ப்பு சாதனைகளின் சொந்தக்காரர். சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றவர். 'செம்மொழிகள்' உட்பட இவரது நூல்கள் மூன்று பல்கலைக் கழகங்கலில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் உட்பட பல அறிவியல் புனைக்கதைகளும்(science fiction) வெளிவந்துள்ளன. கடலூரில் ஒரு பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது உட்பட பல அரசு விருதுகள் பெற்றவர்.


3. பிரைல் மொழி - பூஜ்யமாம் ஆண்டு என்ன சிறப்பு?

பிரைலில் ஒரு புத்தகத்தை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. சாதாரண நூலில் 20 பக்கம் வருகிறது என்றால் பிரைலில் அது 60 பக்கம் வரும். அதாவது மூன்று மடங்காக வரும். பூஜ்யமாம் ஆண்டு நூலின் பிரைல் பதிப்பு பல புதிய உத்திகளை அடிப்படையாகக் கொண்டது.

- முதன்முறையாக பக்கதின் இரு புறமும் அச்சாக்கப்பட்டுள்ளது.

- அமெரிக்காவின் கணினி தொழில் நுட்பம் கொண்டு - தானியங்கி அச்சாக்கம் பெற்ற புத்தகம் இது.

- எளிதில் கையாளத் தக்க எடை மிகவும் குறைந்த காகிதத்தில் அச்சாகியுள்ளது.

'பூஜ்யமாம் ஆண்டு' நூல்தான் பார்வையற்றோரின் பாடப்புத்தகத்திற்கு வெளியே முழுவதும் பிரைலிலேயே அச்சான முதல் தமிழ் நாவல் ஆகும். அதுமட்டுமல்ல இது பிரைல் மொழி வாசிப்பை பிரைல் கண்டு படித்து 200 வருடங்கள் ஆனதை (1808 - 2008) கொண்டாடும் வகையில் தமிழில் சத்தமின்றி சந்தடியின்றி நடந்துள்ள அரிய முயற்சி.


4. பிரைல் மொழியில் இதை கொண்டு வருவதன் மூலம் 'பூஜ்யமாம் ஆண்டு' நாவலாசிரியர் இரா.நடராசன் உணர்த்த விரும்புவது என்ன?

- பார்வையற்ற மாணவர்களாலும் அறிவியலை ஒரு பாடமாக எடுத்து படிக்கமுடியும். கணினி முதல் பொறியியல் வரை அவர்களையும் கல்லூரிகளில் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும்.

- அறிவியலை பார்வையற்ற மாணவர்கள் கற்றறியும் விதத்தில் சுவைபட நூலாக்கம் செய்து உயர்கல்வித்துறை அவர்களுக்கு கல்வியளிக்க முன்வர வேண்டும்.

- எளிய அறிவியல் சோதனைகள் செய்திட பார்வையற்றோர் பள்ளிகளில் ஆய்வகங்களை நிறுவிடவேண்டும்.

- தமிழ் உட்பட இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியப் படைப்புகளை பார்வையற்றோரும் வாசிக்கும் வண்ணம் பிரைலில் உடனடியாக கொண்டு வரவேண்டும்.

- இறுதியாக, உலகில் கனடா, ஜப்பான் உலட்பட 17 நாடுகளில் பார்வையற்றவர்கள் ராணுவத்தில் கூட பணி புரிய அனுமதிக்கப்படும் போது நாம் அறிவியல் தொழில் நுட்பத்திற்குள் அவர்களை அங்கமாக்க தயக்கம் காட்டுவதேன்? F.M. வானொலி சேவையிலிருந்து எலெக்ட்ரானிக் துறை வரை அவர்களை தாராளமாக செயல்பட நாம் ஏன் அனுமதிக்கக்கூடாது.

இவற்றை எல்லாம் இந்த நாவல் பேசுகிறதா? இல்லை மேற்கூறிய விஷயங்களுக்கும் நாவலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் பார்வையற்ற சிறுவர்கள் சிறுமியர்கள் கட்டாயம் மேற்கொண்ட கேள்விகளை எழுப்பிக்கொள்வார்கள். அறிவியலின் பிரம்மாண்டமான இந்த வார்த்தை - புரிக்கும் நுழையும் அவர்கள் அடையப்போகிற ஆச்சரியங்கள் இதுவரை அவர்கள் அடையப்போகிற ஆச்சரியங்கள் இதுவரை அவர்கள் அனுபவித்தறியாத நினைத்தே பார்க்க முடியாதவை என்பதில் சந்தேகமே இல்லை.


தொடர்புக்கு:
- பாரதி புத்தகாலயம், 7 - இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

- இரா.நடராசன், 8 - திருப்பூர் குமரன் தெரு, ஜோதி நகர், கடலூர்-2.Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்